முதுமை
எனக்கு அவரை 2016ல் இருந்து தெரியும். பார்த்தால் இலேசில் போக மாட்டார். என்ன என்னவோ எல்லாம் பேசிக்கொண்டே இருப்பார்.
தன் இளமைக்காலத்துக் கதை, முதல் மனைவி, இரண்டாவது மனைவி, தற்போதைய மனைவி, தன் நண்பி, அவர்களோடு செய்த பயணங்கள் என்று அவரிடம் சொல்ல நிறைய இருக்கும்.
பல நேரங்களில் சிரிப்பாக இருக்கும், சில நேரங்களில் கடுப்பாக இருக்கும்.
சில நேரங்களில் எனக்கும் அவரோடு உரையாடச் சுவாரசியமாக இருக்கும். நாடுகளைச் சுற்றுவதும், புதுப்புது மனிதர்களோடு உரையாடுவதும் அவர்களுக்குப் பிடித்தமானவை. அதில் பல நமக்குத் தெரியாத விடயங்களைத் தெரிந்துகொள்ளும்போதோ, அல்லது ஒரு விடயத்தை அதுவரையில் நாம் பார்க்காத கோணத்தில் அவர்கள் பார்த்திருப்பதைச் சொல்வதைக் கேட்கையிலோ வியப்பாக இருக்கும்.
பல நேரங்களில் போதுமே, என்னை விட்டுடுங்க என்று சொல்ல வேண்டும் போலிருக்கும். பிறகு பிறகு நாசுக்காகத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டேன். வேலை இருக்கிறது, அதை நான் முடிக்க வேண்டும் இப்படி ஏதோ ஒன்றைச் சொல்லிப் பேச்சைக் கத்தரிவித்துவிடுவேன்.
தற்போது அவருக்கு 88 வயது. போன வருடத்திலிருந்து தன் மனைவிக்குத் தான் வீட்டில் இருப்பது பிடிக்கவில்லை என்று சொல்ல ஆரம்பித்தார். முதல் முறை கேட்கையில் திக் என்று இருந்தது எனக்கு.
ஆனால் அவர் தன் மனைவியைக் குற்றம் சாட்டவில்லை. மனைவி பக்கம் இருக்கும் நியாயத்தையும் புரிந்துகொண்டார். மனைவிக்கு அவர் சுமையாக இருக்கிறாராம். மனைவி 70தைத் தொட்டவர். தான் வாழ்ந்தது போதும் என்று தினமும் சொல்லுவார். முடிந்தவரையில் மனைவிக்கு உறுதுணையாக இருப்பார். அதன் பொருள் அவர் தன்னை வெறுத்துவிடாமல் கூடவே வைத்துக்கொள்ளட்டும் என்பது என்று நானாகவே புரிந்துகொண்டிருக்கிறேன்.
இந்த மனநிலைக்கு ஒரு மனிதர் வருவது என்பது எத்தனை வேதனையான விடயம்? அதன் பிறகு அவரை நான் தவிர்ப்பதில்லை. என்னவோ என்னால் முடிந்தது என்று எண்ணி அவரைப் பேச விட்டுக் கேட்டுக்கொண்டு இருப்பேன்.
போன வருடக் கடைசியிலிருந்து ‘முதியோர் இல்லம் ஒன்றை தேட ஆரம்பித்துவிட்டேன், உனக்கும் ஏதாவது நல்ல முதியோர் இல்லம் இருந்தால் சொல்லு. எனக்கு அங்குப் போகவே விருப்பம் இல்லை. ஆனால், வேறு வழியும் இல்லை’ என்று சொல்ல ஆரம்பித்தார்.
உண்மையிலேயே மனம் அழும் நிலை எனக்கு. இந்தளவுக்கு நாம் வாழ்ந்துவிடக் கூடாது என்றுதான் தோன்றும். நேரத்துக்கே போய்ச் சேர்த்துவிட வேண்டும் என்றெல்லாம் நான் என்னைக் குறித்து நினைத்ததுண்டு.
இப்போது அவருக்கு முழங்கால் சிரட்டையில் ஏதோ ஒப்பரேஷன் ஒன்று நடக்கப்போகிறது. புது வருடம் பிறந்ததற்கு இன்றுதான் வந்தார். மகிழ்ச்சியாக அவருக்குப் புத்தாண்டு வாழ்த்துச் சொன்னேன். நீயும் நானும் பரிமாறிக்கொள்ளும் கடைசிப் புத்தாண்டு வாழ்த்து இதுதான் என்று அவர் சொல்லவும் அப்படி ஒரு வலி.
ஏன் என்னாயிற்று என்று விசாரித்தேன்.
நாளைக்கே வைத்தியசாலைக்குப் போகிறாராம். 15 நாள்கள் அங்கே இருக்க வேண்டி வருமாம். அதன் பிறகு சில வாரங்களுக்குப் பராமரிப்பு இல்லம் ஒன்றுக்கு அனுப்பப்படுவார். அவர் கால் முழுவதும் சுகமானதும் அப்படியே முதியோ இல்லத்திற்குப் போய்விடுவாராம். எந்த முதியோர் இல்லம் என்று தெரிவு செய்துவிட்டாராம் என்று சிரித்த முகமாகச் சொல்லி விடைபெற்றுக்கொண்டார்.
இன்று என்னோடு அவர் நிறைய பேசவே இல்லை. வா, நீயும் நானும் சேர்ந்து கோப்பி அருந்தலாம் என்று அழைத்தேன்.
முகம் நிறையப் புன்னகைத்து, ‘அங்கே என் மனைவி காலை உணவு, கோப்பியோடு தயாராக இருக்கிறாள், என்னால் முடியாது. மன்னித்துவிடு பெண்ணே!’ என்று சொல்லிவிட்டுப் போகிறார்.
தன் வீட்டில் தன் மனைவியோடான கடைசி நாள் என்று அவர் நினைத்திருக்கலாம்.