• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்னுயிராவாய் என்னுயிரே - 1

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 1

அழகாய் புலர்ந்து நின்றது அந்தக் காலைப்பொழுது. காலைக் கதிரவன் தன் கதிர்களை மெல்லமெல்ல பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்க, கிளிநொச்சியில் ஆனந்தபுரத்தில் அமைந்திருந்த அந்த வீடு என்றுமில்லாத வகையில் அன்று மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

அந்த இல்லத்தின் அரசி மஞ்சுளா, காய்ச்சிய பாலை இரண்டு கப்புகளில் மாற்றி மாற்றி ஊற்றிச் சூட்டினை ஆற்றியபடி சமையல் அறையிலிருந்து வெளியே வந்தார். “ராகினி, அர்ஜூன் தயாராகி விட்டானா? நேரமாகிறது பார்.” என்று தன் மருமகளிடம் பேரனைப் பற்றி விசாரித்தார்.

வெள்ளை நிறத்தில் ‘ஷர்ட்’உம் நீல நிறத்தில் அரைக் காற்சட்டையும் அணிந்து நீலநிற டையும் கட்டித் தயாரான மகன் அர்ஜூனுடன் மாடியிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த ராகினியின் முகத்தில், பெரும் பரபரப்புடன் நின்ற தன் மாமியாரைப் பார்த்ததும் முறுவல் நன்றாகவே மலர்ந்தது.

“ஏன் அத்தை இவ்வளவு பரபரப்பு? உங்கள் பேரன் என்ன அடுத்தக் கண்டத்துக்கா போகப் போகிறான்? பள்ளிக்கூடத்துக்குத் தானே. அதுவும் முதலாம் வகுப்புக்கு.” என்ற ராகினியின் குரலில் மெல்லிய கேலியும் கலந்திருந்தது.

அதைக்கேட்ட மஞ்சுளாவின் முகத்திலும் புன்னகை. அவர் ஏதோ சொல்ல வாயைத் திறக்க முதலே ஒருபக்கக் கைப்பிடியைப் பிடித்தபடி படிகளில் தட தடவென்று இறங்கி ஓடிவந்து அவரின் காலைக் கட்டிக்கொண்டான் செல்லப் பேரன்.

“அப்பம்மா நான் பள்ளிக்கூடத்துக்குப் போகப்போறேன். நாளைக்கே நான் டாக்டர் ஆகிவிடுவேனே…” என்றவனை, கையிலிருந்த கப்புகளை அருகிலிருந்த சாப்பாட்டு மேசையில் வைத்துவிட்டு உள்ளம் பூரிக்கத் தூக்கிக்கொண்டார் மஞ்சுளா.

“பார்த்தாயா ராகினி என் பேரனை. பள்ளிக்கூடம் போகமுதலே படிப்பில் எவ்வளவு ஆர்வம் என்று. டாக்டராகப் போகிறானாம்.” என்றார் பெருமையாக.


“டாக்டர் ஆனதும் அப்பம்மாவுக்கு வைத்தியம் பார்ப்பாயா கண்ணா?” என்று பேரனிடமும் கேட்டார்.

“ம்ம்… அப்பம்மாவுக்கு மருந்து எல்லாம் தருவேனாம். ஆனால் ஊசி மட்டும் போடமாட்டேன். அது வலிக்கும்.” என்றவன், இரண்டு வாரத்துக்கு முதல் தனக்குப் போடப்பட்ட தடுப்பூசியின் நினைவாக முகத்தைச் சுளித்தபடி, ஊசி ஏற்றிய கையை இப்போதும் தடவிக்கொண்டான்.

அவன் செய்கையால் சிரிப்பு வந்தபோதும் அவனது பேச்சால் உள்ளம் நெகிழ்ந்தது மஞ்சுளாவுக்கு. பின்னே, பேரன் அவருக்கு வலிக்கக் கூடாது என்று எண்ணுகிறானே..!

பெருமிதம் முகத்தில் துலங்க, “என் ராஜாக்குட்டி..!” என்றவர் அவனை ஆசையோடு உச்சி முகந்தார். பதிலுக்கு அவனும் தன் ரோஜாமொட்டு இதழ்களை அவர் கன்னத்தில் அழுத்தமாகப் பதித்தான்.

அவனின் அந்தச் செய்கையில் அவரின் முகம் தன்னாலே மலர்ந்து விகசிக்க, அங்கிருந்த கதிரையில் அமர்ந்தவர், மேசையில் பேரனை அமர்த்திப் பாலை அவனுக்கு அருந்தக் கொடுத்தார்.

இரண்டு கைகளாலும் கப்பைப் பற்றி, மேலுதட்டில் மீசை வரைந்தபடி பாலை அருந்தும் பேரனின் தலை முடியைக் கோதி விட்டவர், “எங்கே ராகினி விமலன்? உள்ளே இன்னும் என்ன செய்கிறான்? அர்ஜூனுக்கு நேரமாகிறது..” என்றார் கடிந்துகொள்ளும் குரலில்.

“இன்னும் நேரம் இருக்கிறது அம்மா! சும்மா அவசரப் படுத்தாதீர்கள்.” வெளியே செல்லத் தயாராகி வந்துகொண்டிருந்த விமலன் சொன்னான்.

“உணவை எடுத்துவை ராகினி. காரும் இன்று இல்லை. ஆட்டோவில்தான் போக வேண்டும்.” என்று மனைவியை ஏவியபடி மஞ்சுளாவுக்கு எதிர்புறத்தில் அமர்ந்தான் அவன்.

“ஏனடா, காருக்கு என்ன? இதையெல்லாம் முதலே பார்த்து வைக்கமாட்டாயா? என் பேரன் முதன் முதலாகப் பள்ளிக்கூடம் போகப்போகிறான். ஆட்டோவிலா போவது? ஒரு பிள்ளைக்கு அப்பா ஆகியும் பொறுப்பு என்பது கொஞ்சமும் இல்லை உனக்கு. ஒன்றுக்கு நான்கு கார்கள் வீட்டில் நிற்கிறது. பிறகு ஏன் ஆட்டோவில் போக வேண்டும் என்கிறாய்.” என்றார் மஞ்சுளா எரிச்சலோடு.

மாமியார் கணவனைப் பொறுப்பற்றவன் என்று கடிந்ததில் உண்டான சிரிப்பை வாய்க்குள் அடக்கியபடி உணவைப் பரிமாறிய மனைவியை முறைத்துவிட்டு, “காருக்கு வரும் பழுது சொல்லிக்கொண்டா அம்மா வரும்? நேற்று மாலைதான் பிரேக்கில் என்னவோ சத்தம் கேட்டது. கராஜில் கொண்டுபோய் விட்டேன். அவன் உடனேயே தருவானா? அமலன் தன் காரில் வவுனியாவுக்குப் போய்விட்டான். அப்பாக்கு இன்று காலை மற்ற விவசாயிகளோடு ஏதோ மீட்டிங் என்றார். தர்சன்.. உங்கள் அருமைப் புத்திரன் தன் காரை யாருக்காவது தருவானா? பிறகு ஆட்டோவில் போகாமல் என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்றான் அவனும் சினத்தோடு.

“எதைக் கேட்டாலும் வக்கணையாகப் பதிலை மட்டும் சொல்லு!” என்று அப்போதும் அவனைக் கடிந்தவர் மாடியை நோக்கி, “தர்சா..!” என்று கடைசி மகனைச் சற்றே உரக்க அழைத்தார்.

அங்கிருந்து எந்தப் பதிலும் வராததில் அவரது பொறுமை பறந்தது.

“ஒன்றுக்கு மூன்றாக ஆண்பிள்ளைகளைப் பெற்றதுதான் மிச்சம். எருமை மாடுகள் மாதிரி வளர்ந்து இருக்கிறீர்களே தவிர ஒருவருக்கும் பொறுப்பு என்பது கொஞ்சமும் இல்லை.” என்றார் மகனிடமிருந்து பதில் வராத கோபத்தில்.

மனைவியின் பேச்சைக் கேட்டபடி உள்ளே நுழைந்தார் அந்த வீட்டின் தலைவர் ராஜசேகர்.

அவரைக் கண்டதும், “இன்றும் உங்களுக்கு உங்கள் நடைப் பயிற்சிதான் முக்கியமா? இன்று நீங்கள் வேலைக்கு ஆட்டோவில் போங்கள். விமலனுக்குக் கார் வேண்டும். அவன் கார் என்னவோ பழுதாம்.” என்றார் உத்தரவாக.

மனைவியின் குணம் அறிந்திருந்தவர், “சரிம்மா..” என்றபடி வந்து அவரின் அருகில் அமர்ந்து கொண்டார்.

“அப்பப்பா, அர்ஜூன் பள்ளிக்கூடம் போகப் போகிறானே..” என்று அவரிடமும் பெருமையாக அறிவித்தான் பேரன்.

பேரனின் மகிழ்ச்சியைப் பார்த்தவரின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“அடடா! ஆமாம் இல்லையா.. பள்ளிக்கூடத்தில் நன்றாகப் படித்தால் அர்ஜூனுக்கு அப்பப்பா பெரிய சைக்கிள் வாங்கித் தருவேனாம்.”

“இப்போது இருப்பதை விடப் பெரிதாகவா?” ஆர்வத்திலும் ஆசையிலும் விழிகள் விரியக் கேட்டான் அர்ஜூன்.

“அதைவிடப் பெரிதுதான். எங்கள் அர்ஜூன் பள்ளிக்கூடம் போகும் அளவுக்கு வளர்ந்துவிட்டானே. அப்போ பெரிய சைக்கிள் தானே வேண்டும்.” என்றவரை இடையிட்டார் அவர் மனையாள்.

“இங்கே அவன் பள்ளிக்கூடம் போவதற்கே கார் இல்லையாம். இதில் சைக்கிள் வாங்கிக் கொடுப்பாராம் இவர்.”

“அதுதான் அவன் என் காரை கொண்டு போகட்டும் என்றாயேம்மா..” என்று மனைவியிடம் சொல்லி அவரைச் சமாதானப்படுத்தியவர் விமலனிடமும் அதையே சொன்னார்.

ஒரு விவசாயியான ராஜசேகர் இன்று நேரடியாக விவசாயத்தில் ஈடுபடாதபோதும், நிறைய விவசாய நிலங்களை வாங்கி ஆட்களை வைத்து விவசாயம் செய்துகொண்டிருந்தார். எனவே தினமும் அனைத்து நிலங்களுக்கும் செல்வது, அங்குள்ள பிரச்சினைகளைப் பார்ப்பது என்று எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும் அவர் ஆட்டோவில் போவது உசிதமாகப் படவில்லை விமலனுக்கு. அறுபதை நெருங்கிவிட்ட அவரின் தேகம் திடகாத்திரமாகத் தோற்றமளித்தாலும் வயதுக்கு ஏற்ற இயலாமை இருக்குமல்லவா.

எனவே, “வேண்டாம்பா. நான் ஆட்டோவிலேயே போகிறேன். இன்று ஒருநாள் அர்ஜூன் ஆட்டோவில் போவதால் ஒன்றும் ஆகாது. நாளைக்கு என் கார் வந்து விடும் தானே.” என்றான் தாய் தந்தையர் இருவருக்கும் பொதுவாக.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“ஏன், உன் காருக்கு என்னாகிற்று?” என்று அவனுக்குப் பின்னாலே கேட்டது ஒரு கம்பீரமான குரல்.

இயல்பாகவே அதிகாரம் கலந்திருந்த அந்தக் குரலிலேயே கேட்பது தம்பி என்பதை உணர்ந்து, “பழுதுடா..” என்றவனின் குரலில், இதை எத்தனை தடவைதான் சொல்வது என்கிற சலிப்பு மிக நன்றாகவே இருந்தது.

சிறியதகப்பனைக் கண்டதும், “சித்தப்பா, நான் பள்ளிக்கூடம் போகப் போகிறேன்..” என்றபடி அவனிடம் ஓடினான் அர்ஜூன்.

“அடேய் வாண்டு. உன்னையெல்லாம் யாருடா பள்ளிக்கூடத்தில் சேர்த்தது..” என்று கேட்டபடி, அவனை இரு கைகளாலும் தூக்கி மிக லாவகமாக மேலே எறிந்து பிடித்தான் தர்சன்.

“கவனம் தர்சன்..” என்ற ராகினியின் குரலோடு, “அடேய் முரடா. உன் முரட்டுத் தனத்தை அவனிடம் காட்டாதே என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்...” என்ற மஞ்சுளாவின் குரலும் பதட்டத்தோடு கேட்டது.

அர்ஜூனோ தர்சன் தூக்கிப் போட்டுப் பிடித்ததில் ஆர்ப்பாட்டமாய்க் கிளுக்கிச் சிரித்தான். “சித்தப்பா இன்னொருக்கா..” என்று கேட்கவும் தவறவில்லை அவன்.

“நீ இன்னொரு தடவை கேட்கிறாய். ஆனால் உன் அம்மாவும் என் அம்மாவும் பயந்து சாகிறார்கள் பார்.” என்று, தாயையும் அண்ணியையும் கேலி செய்தபோதும் பெறாமகன் கேட்டதைச் செய்யத் தவறவில்லை அவன்.

“தர்சா! போதும் அவனைக் கீழே இறக்கிவிடு. அப்படியே உன் காரையும் இன்று மட்டும் விமலனுக்குக் கொடு!” என்றார் மஞ்சுளா.

“அது என் கார் அம்மா!”

“இல்லையென்று யார் சொன்னது? இன்று மட்டும் அவனுக்குக் கொடு என்றுதானே சொல்கிறேன்.” என்றார் அன்னை.

“அதெல்லாம் முடியாது மஞ்சுளா மேடம். என் பொருளை யாருக்கும் எதற்காகவும் கொடுக்கமாட்டேன்.”

“இதென்ன பழக்கம் தர்சன். எதுக்கெடுத்தாலும் பிடிவாதம் தானா?” என்று மகனைக் கண்டித்தவர், “என்னப்பா, நீங்களும் அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டு பேசாமல் இருக்கிறீர்கள். அவனிடம் காரைக் கொடுக்கச் சொல்லிச் சொல்லுங்களேன். அர்ஜூன் பாவம் இல்லையா.” என்று கணவரிடமும் முறையிட்டார்.

அதற்குப் பதில் சொல்லாத ராஜசேகர், “தர்சன்! உன் காரில் அண்ணாவையும் அர்ஜூனையும் நீயே கூட்டிக்கொண்டு போ! அர்ஜூனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டு, அண்ணாவை அவன் வேலையிடத்தில் இறக்கிவிட்டு நீ உன் வேலையைப் பார்!” என்றார்.

அவன் குணத்தை நன்றாக அறிந்திருந்தவர் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையைக் கண்டிக்க விரும்பாத போதும், அவனுக்கான வேலையை உணர்த்தவும் தவறவில்லை.

“இந்த ஐடியா ஓகே. அதை விட்டுவிட்டு என் காரை அவனிடம் கொடுக்கச் சொன்னால் எப்படி?” என்றான் தாயிடம் தர்சன்.

“டேய் அண்ணா! நீ தயார் என்றால் வா. அண்ணி நீங்கள் வரவில்லையா?” அர்ஜூனை அப்போதும் கையில் தூக்கி வைத்திருந்தபடி கேட்டான் தர்சன்.

“நான் வராமல் எப்படித் தர்சன். நீங்கள் காரை எடுங்கள், நான் அர்ஜூனின் பள்ளிக்கூடப் பாகை எடுத்துக்கொண்டு இதோ வருகிறேன்.” என்றுவிட்டு உள்ளே நுழைந்தாள் ராகினி.

பள்ளிக்கூடத்துக்கு முன்னால் வீதியின் ஓரமாகக் காரை நிறுத்திய தர்சன் தானும் விமலன் குடும்பத்துடன் இறங்கி நடந்தான்.

பாடசாலை இன்னும் தொடங்காத காரணத்தால் மாணவ மாணவியர் அங்குமிங்கும் நின்றபடியும் நடந்தபடியும் இருந்தனர்.

தன் கையைப் பிடித்தபடி, ஆவலாக அந்தப் பள்ளி வளாகத்தைச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டு நடந்துவந்த அண்ணன் மகனிடம், “டேய் அர்ஜூன். பாருடா எல்லாமே அழகான பெண்களாக இருக்கிறார்கள். இதில் உன் சித்தப்பாவுக்குப் பொருத்தமாகச் சித்தி இருக்கிறாளா என்று பார்த்து வந்து சொல்லுடா..” என்றான் தர்சன்.

சித்தப்பா சொன்னதன் அர்த்தம் புரிந்ததோ இல்லையோ, “ஓகே சித்தப்பா.” என்று பெரிதாகத் தலையை ஆட்டினான் சின்னவன்.

“ஐயோ தர்சன்! அவன் சின்னப்பிள்ளை, அவனிடம் பேசும் பேச்சா இது..” என்றாள் ராகினி.

“இன்னும் கொஞ்ச நாளில் இந்தச் சின்னப்பிள்ளை என்னை விட மோசமாகக் கதைப்பான் அண்ணி. அப்போது என்ன சொல்வீர்கள்?”

“என் மகன் ஒன்றும் உங்களை மாதிரி இல்லை!”

“அதென்னவோ உண்மைதான். அவன் என்னை மாதிரி இருக்க மாட்டான். என்னை விடவும் மோசமாக இருப்பான்.” என்று வழக்கடித்தபடி வந்தவர்களைக் கொஞ்சமும் கவனித்தான் இல்லை விமலன்.

சற்றே அமைதி விரும்பியான அவனுக்கு இவர்களின் இந்தப் போக்கு பழக்கமான ஒன்று. எனவே அதிபரின் அறையை நெருங்கியதும், “இனியாவது இருவரும் கொஞ்சம் அமைதியாக இருங்கள்.” என்றுமட்டும் சொன்னான்.

“அதை உங்கள் தம்பியிடம் சொல்லுங்கள்”

“அதை உன் மனைவியிடம் சொல்!” என்ற இருவரையும் பார்த்து முறைத்தவன், அதிபரின் அறைக்குள் அவரின் அனுமதியுடன் நுழைந்தான்.

அவனோடு ராகினியும் அர்ஜூனும் செல்ல, எதற்கு எல்லோரும் கும்பலாகச் செல்வான் என்று நினைத்த தர்சன் மட்டும் அறைக்கு வெளியே நின்றுகொண்டான்.

அவன் பார்வையோ அந்தப் பள்ளிக்கூடத்தை அசுவாரசியமாகச் சுற்றி வந்தது. அப்போது அந்தப் பள்ளிக்கூடத்துக்கு உள்ளே வந்துகொண்டிருந்தார் ஒரு பெண்மணி.

ஒல்லியான தேகத்தில் கண்ணை உறுத்தாத வண்ணத்தில் சேலையணிந்து, நெற்றியில் திருநீறும் சந்தனமும் இட்டு, கண்ணுக்கு மூக்குக் கண்ணாடி அணிந்து, ஒரு பக்கத் தோளில் அவரது கைப்பை தொங்க, அந்தப் பக்கத்துக் கையோ சில புத்தகங்களைத் தாங்கி நின்றது.

நிமிர்ந்த நடையோடு அவர் வந்த விதமும், அவர் முன்னால் எதிர்ப்பட்ட மாணவ மாணவியர் சொன்ன காலை வணக்கமும் அந்தப் பள்ளிக்கூடத்து ஆசிரியர் அவர் என்று காட்டியது.

முதலில் சாதரணமாக அவரைப் பார்த்த தர்சன், இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று கூர்ந்து பார்த்தான்.

அப்படிப் பார்த்தவனின் விழிகள் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் மெல்ல மெல்ல விரிந்தன. அவர் அவனை நெருங்கி வரவர அவனால் அவரிடமிருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை.

கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்துப் பார்க்கிறான். அது நீண்ட காலமாக இருந்தாலும் உயிரில் கலந்த உறவு மறந்து போகுமா என்ன?

அவனின் அன்பு அத்தை! அவன் தந்தையின் ஒரேயொரு தங்கை. இதுநாள் வரை அவன் குடும்பம் தேடிக்கொண்டிருக்கும் உறவு.

பதினாறு வயதில் பார்த்த அண்ணன் மகனை அவருக்கு அடையாளம் தெரியாத போதும், உடலின் மெலிவும் தலையில் ஆங்காங்கே தெரிந்த நரை முடியும் அவரை மாற்றிவிடுமா என்ன?

அவரேதான்!

அவனுக்குச் சந்தேகமே இல்லை!

விழிகளை அகற்றாது தன்னையே பார்க்கும் அவனை நேர் விழிகளால் அளந்தபடி அந்தப் பெண்மணி அவனைக் கடந்துசெல்ல, “அத்..தை..” என்று முணுமுணுத்தன அவன் உதடுகள் அவனை அறியாமலேயே.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
நடந்துகொண்டிருந்தவரின் நடை தடாலென நிற்க, உடலில் ஓடிய சிலிர்ப்போடு சட்டெனத் திரும்பியவர், “ஏதாவது சொன்னீர்களா தம்பி?” என்று ஒருவிதப் பரபரப்பான குரலில் கேட்டார்.

விழிகளோ அவன் முகத்தைக் கூர்ந்து தான் தேடும் அடையாளத்தைக் கண்டுபிடிக்க முயன்றது.

அவர் முகத்திலேயே பார்வையை நிலைக்க விட்டபடி, “என்னைத் தெரியவில்லையா அத்தை?” என்று கேட்டான் தர்சன்.

உணர்ச்சிகளின் பிடியில் திடீரெனச் சிக்கிவிட்ட அவனது குரலும் மெலிதாகக் கரகரத்தது.

“அத்தையா?” என்று கேட்டவர், அவனை இன்னும் இரண்டடி நெருங்கி, “யாரப்பா நீ? என் அண்ணன் பிள்ளையா? விமலனா, அமலனா அல்லது தர்சனா? என்னால் அடையாளம் காண முடியவில்லையே..” என்று பரிதவித்தவரின் விழிகள் கண்ணீரைக் கொட்டின.

“என் செல்ல அத்தை! எதற்கு அழுகிறீர்கள்? நான் உங்கள் அண்ணனின் கடைசிப் புத்திரன் தர்சன்.” என்றவன், ஆனந்த மிகுதியில் அவரைக் கட்டிக் கொண்டான்.

“தர்சனா? என் தர்சனா நீ? இவ்வளவு நாளும் நீங்கள் யாரும் என்னைத் தேடி வரவில்லையே? இந்த அத்தையை மறந்து விட்டீர்களா? அண்ணாவும் அண்ணியும் எப்படி இருக்கிறார்கள் தர்சா? விமலனும் அமலனும் எங்கே?”

யாரிடமும் எதுவும் சொல்லாமல், அப்போது பத்து வயதேயான மகளுடன் தானாகத்தான் அவர்களின் வீட்டை விட்டு வெளியேறியதை மறந்து தன் மனதின் குமுறலை வெளிப்படுத்தினார் மகேஸ்வரி.

“எல்லோரும் நன்றாக இருக்கிறோம் அத்தை. விமலன் அண்ணாவின் மகனை இங்கே பள்ளிக்கூடத்தில் சேர்க்க வந்திருக்கிறோம். அவனும் அண்ணியும் அதிபரின் அறையில்தான் இருக்கிறார்கள். அமலன் வவுனியாவுக்குப் போய்விட்டான். மாலை வந்துவிடுவான். அப்பா அம்மா நன்றாக இருக்கிறார்கள்.” என்றவன், விழிகளில் குறும்பு மின்ன, “என்னவோ நாங்கள்தான் உங்களை வீட்டிலிருந்து துரத்தி விட்டதுபோல் சொல்கிறீர்களே அத்தை. நியாயப்படி பார்த்தால் நான் உங்களுடன் கதைத்தே இருக்கக் கூடாது. ஆனால் என் செல்ல அத்தையைக் கண்டதும் கதைக்காமல் போக மனம் வரவில்லை. அதைவிட அப்பா உங்களைப் பார்த்தால் மிகவும் சந்தோசப் படுவார்.” என்றவனின் மறைமுகக் குற்றச் சாட்டிலும், கூடப்பிறந்த தமையனின் நினைவிலும் மகேஸ்வரியின் விழிகளில் நிற்காமல் கண்ணீர் வழிந்தது.

“நான்தான் தர்சா அறிவு இல்லாமல் அப்போது தவறு செய்துவிட்டேன். இந்தப் பத்து வருட வாழ்க்கை அதை எனக்கு மிக நன்றாகவே உணர்த்திவிட்டது.” என்றார் அழுகையினூடு.

அந்தப் பக்கத்தால் சென்ற பள்ளி மாணவர்கள் அவர்களின் ஆசிரியை அழுவதையும், அங்கே நின்ற அந்நியனான தர்சனையும் வித்தியாசமாகப் பார்ப்பதை உணர்ந்தவன், “அத்தை! முதலில் அழுவதை நிறுத்துங்கள். உங்கள் பள்ளிக்கூட மாணவர்கள் பார்க்கிற பார்வையைப் பார்த்தால் உங்களை அழ வைத்தவன் நான் என்று நினைத்து என்னைப் புரட்டி எடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது.” என்றான் கேலியும் கண்டிப்பையும் கலந்து.

அவன் பேச்சில் விரிந்த புன்னகையுடன் தன் கண்ணாடியைக் கழட்டிக் கண்களைத் துடைத்துக் கொண்டவர், “போடா! உன்னையாவது என் மாணவர்கள் அடிப்பதாவது. எவ்வளவு பெரியவனாக வளர்ந்து நிற்கிறாய். நானே அண்ணாந்து பார்க்கவேண்டி இருக்கிறது. இதென்னப்பா தாடி எல்லாம் வளர்த்திருக்கிறாய்.” என்று கேட்டார் அவர், அவன் முகத்தைத் தன் மெல்லிய கரங்களால் வருடியபடி.

“அது அழகுத் தாடி அத்தை. எனக்கு நன்றாக இருக்கிறதா இல்லையா? சொல்லுங்கள்.” என்றபடி, அடர்ந்த மீசைக்குக் கீழே வெண்பற்கள் பளீரிடப் புன்னகைத்தவனின் கம்பீரத்தில் அந்த அத்தையின் மனது கரைந்தே போனது.

“என் அண்ணன் மகனை யாராவது அழகில்லை என்று சொல்வார்களா? தாடி மட்டுமில்லை நீயும் அழகாக இருக்கிறாய் கண்ணா! என் கண்ணே பட்டுவிடப் போகிறது. வீட்டுக்குப் போய் அண்ணியிடம் சொல்லிச் சுற்றிப்போடு.”

அவரின் பேச்சில் வாய்விட்டு நகைத்தவன், அதுவரை தன் மனதில் குறுகுறுத்துக் கொண்டிருந்த கேள்வியை மெல்லக் கேட்டான்.

“எங்கே அத்தை அந்த வெள்ளைப் பன்றிக்குட்டி. என்ன செய்கிறாள்? இப்போது நன்றாக வளர்ந்து இருப்பாளே.”

அதைக்கேட்டு நகைத்தார் மகேஸ்வரி. “இன்னும் நீ அந்தப் பட்டப் பெயரை மறக்கவில்லையா?”

ஒரு புன்முறுவலுடன் இல்லை என்பதாகத் தலையை அசைத்தவன் அவரிடமிருந்து தனக்குத் தேவையான தகவலைப் பிடுங்குவதற்காக அவரையே தொடர்ந்து பேசவிட்டான்.

“வெண்பா வீட்டில் தான் இருக்கிறாள் தர்சா. ஃபாஷன் டிசைனிங் படித்து முடித்திருக்கிறாள். வேலைக்குப் போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாள். எனக்கு விட விருப்பம் இல்லைதான். ஆனால் நான் இங்கே வந்துவிட்டால் அவள் வீட்டில் தனியாகத்தானே இருக்கிறாள் என்பதால் சம்மதம் சொல்லியிருக்கிறேன். நாங்கள் இங்கே கிளிநொச்சிக்குத் திரும்ப வந்து இப்போதுதான் ஒருமாதம் ஆகிறது. இனித்தான் அவளுக்கு வேலை தேட வேண்டும்.” என்றவரை, அவசரமாக இடைமறித்தான் தர்சன்.

“வேலைக்கெல்லாம் அவள் போகத் தேவையில்லை அத்தை. அவளோடு நீங்களும் இனி எங்கள் வீட்டுக்கு வாருங்கள். அங்கே அண்ணியும் இருக்கிறார். அவரோடு வெண்பாவுக்குப் பொழுது நன்றாகவே போகும்.”

அதைச் சொல்கையில் அவன் குரலில் தொனித்த உறுதியையும் உரிமை உணர்வையும் உணர்ந்தவருக்குப் பெருத்த நிம்மதியாக இருந்தது.

அதுநாள் வரை, எல்லோரும் இருந்தும் யாருமில்லா அனாதையாக நானும் மகளும் நிற்கிறோமே என்று எண்ணி வருந்தியவருக்கு, இனி அண்ணனும் அண்ணன் பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்கிற நினைவே தித்திப்பாக இருந்தது.

அதற்குள் அதிபரின் அறையிலிருந்து அர்ஜூனுடன் விமலன் தம்பதியரும் வெளியே வரவே திரும்பவும் ஒரு பாசப் போராட்டம் ஒன்று அங்கே அரங்கேறியது.

எல்லோருமாகச் சென்று அர்ஜூனை அவன் வகுப்பில் கொண்டுபோய் விட்டனர். அந்தப் பள்ளிக்கூடத்தின் ஆசிரியையின் மருமகனின் மகன் என்றதும் அவனுக்கான மதிப்பும் சற்றே உயர்ந்து நின்றது. சென்ற சிறிது நேரத்திலேயே அவனும் வகுப்பில் பொருந்திவிட, ஏதாவது என்றால் தங்களுக்கு அழைக்கும்படி கேட்டுக்கொண்டு வெளியே வந்தார்கள் எல்லோரும்.

“அத்தை! இன்று பள்ளிக்கூடத்துக்கு லீவைப் போட்டுவிட்டு எங்களுடன் வாருங்கள்!” என்றான் தர்சன் உத்தரவாக.

மகேஸ்வரிக்கும் அன்றைய மனநிலையில் பாடம் எடுக்க முடியும் என்று தோன்றவில்லை. எனவே விடுப்பைச் சொல்லிவிட்டு அவர் வர, எல்லோருமாகத் தர்சனின் காரில் ஏறி அமர்ந்தனர்.

காரை இயக்கிக் கொண்டே, “உங்கள் வீடு எங்கே அத்தை இருக்கிறது?” என்று கேட்டான் தர்சன்.

“முதலில் உங்கள் வீட்டுக்கு விடு தர்சா. அண்ணாவையும் அண்ணியையும் பார்த்துவிட்டு எங்கள் வீட்டுக்குப் போகலாம்.”

“இல்லை அத்தை. வெண்பாவையும் கூட்டிக்கொண்டே போவோம். அம்மாவும் அப்பாவும் அவளையும் பார்க்க ஆசைப்படுவார்கள்.” என்றவனின் மனதில் காரணமே இல்லாக் குறுகுறுப்பு!

அவன் சொல்வதும் சரியாகப் படவே தன் வீட்டுக்கு வழியைக் காட்டினார் மகேஸ்வரி.

அங்கே சென்று காரை நிறுத்தியதும் இறங்கிய அத்தையுடன் சேர்ந்தே நடந்தான் தர்சன். அவர்களுக்குப் பின்னால் ராகினியும் விமலனும் சென்றனர்.

காரின் ஓசை கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த வெண்பா, தாயையும் அவரோடு சேர்ந்துவந்த புதியவர்களையும் கண்டுவிட்டுப் புருவங்கள் சுருங்க, வாசல் கதவைத் திறந்தாள்.

திறந்தவளின் விழிகளோ, தர்சனை ஏறெடுத்தும் பாராது அவனருகில் நின்ற தாயைக் கேள்வியுடன் நோக்கின.

அந்தக் கருவண்டு விழிகளையே தன்னை மறந்து பார்த்திருந்தான் பிரியதர்சன்!



 
Top Bottom